ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க இராணுவ நிலைகளில் கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள பரவலான சேதங்களை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராணுவத்தினரால் அடையாளம் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் புகைப்படங்கள் CBS News நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்துக்குள் நிலவும் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் காரணமாக தமது பெயர்களை வெளியிட வேண்டாம் என அவர்கள் கோரியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், Boeing E-3 Sentry ரக நான்கு இயந்திர விமானம் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளமை காணப்படுகிறது. விமானத்தின் வால் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தின் உடற்பகுதியும் தீக்கிரையாகியுள்ளது.
வான்வழி உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கு முக்கியமான சுழலும் ரேடார் அமைப்பையும் இந்த விமானம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே தளத்தில் எடுக்கப்பட்ட ஏனைய புகைப்படங்களில் கட்டடங்கள் மற்றும் இராணுவ வீரர்களின் தங்குமிடங்கள் கடுமையாக சேதமடைந்து காணப்படுகின்றன. அவற்றுக்கு அருகிலிருந்த கான்கிரீட் பாதுகாப்புச் சுவர்களான ‘T-walls’ பெரும்பாலும் பாதிப்பின்றி காணப்படுகின்றன.
குவைத்தில் உள்ள Camp Buehring இராணுவத் தளத்திலும் இதேபோன்ற பாரிய சேதங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் அமெரிக்க இராணுவத் தரைப்படையினர், கவச வாகனங்கள் மற்றும் சில விமானங்களுக்கான முக்கியமான நிலைக்களமாக செயற்படுகிறது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள ‘உபகரண இழப்புகள்’ 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 விமானங்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஈராக், ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் CBS News விடுத்த கருத்துக்கோரிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை பதிலளிக்கவில்லை.
(CBS News)








