இஸ்மதுல் றஹுமான்
கட்டுநாயக்க பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு.
இன்று (16) அதிகாலை சுமார் 3.58 மணியளவில், சீதுவ பொலிஸ் பிரிவில் கட்டுநாயக்க, கொழும்பு வீதியில் அமைந்துள்ள “மிஸ்டர் ஃபுட்” உணவகத்தின் மேல் தளத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக சீதுவ பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் அந்த உணவகத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போயகனே, இசுருபெதெச, 3வது லேனைச் சேர்ந்த
48 வயது வீரசிங்க முதியன்சேலாகே பிரதீப் பிரியசாந்த என தெரியவந்துள்ளது.
நேற்று இரவு (15) வேலையை முடித்த பிறகு உணவகத்தின் மேல் மாடியில் உள்ள தனது அறையில் இருந்ததாகவும், உணவகத்தில் பணிபுரியும் மற்ற இரண்டு ஊழியர்கள் மற்றொரு அறையில் இருந்ததாகவும், இறந்தவருக்கும், அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், மரணம் நிகழ்ந்த விதமும் காரணமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சீதுவ பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








