பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இஸ்லாம் தொடர்பில் அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் செல்லுபடியற்றதாக்கியிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்திருந்த ஞானசார தேரர், குறித்த ஜனாதிபதி மன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, நாவல வீதி, ராஜகிரியவில் உள்ள ஞானசார தேரரின் விகாரைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் சென்றதாகவும், அவரது இருப்பிடம் தெரியவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாகவும் ‘தி சண்டே ஐலண்ட்’ செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஞானசார தேரருக்கு நெருக்கமான தரப்பினர் மறுத்துள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் எவரும் விகாரைக்கு வரவில்லை என்றும், ஞானசார தேரரின் இருப்பிடம் தெரியவில்லை என வெளியான செய்திகளிலும் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றதாக்கப்பட்டமை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முழுமையான விபரங்களை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் முன்னிலையான வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து தனியானதாகும். இவ்வழக்கு இஸ்லாம் தொடர்பில் அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.








