மக்கா நகரை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்களால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் ஒன்றை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை, குறித்த ட்ரோன் தடைசெய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்னர் சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் வழிபாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்குமான முயற்சி என அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாப்பும் யாத்திரிகர்களின் பாதுகாப்பும் “சிவப்புக் கோடு” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், மக்கா அல்லது ஏனைய இஸ்லாமிய புனிதத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஹூதிகள் மறுத்துள்ளனர்.
மக்கா நகருக்கோ அல்லது ஏனைய இஸ்லாமிய புனிதத் தலங்களுக்கோ யெமனிலிருந்து எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஹூதி இராணுவத் தரப்பு யெமனின் SABA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை மக்காவில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டதுடன், சில நிமிடங்களுக்குப் பின்னர் அது நீக்கப்பட்டது. சவூதியின் தாயிஃப் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவிலும் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்காவை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல் தொடர்பில் இவ்வாறான பாதுகாப்பு எச்சரிக்கை முதன்முறையாக விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்காவில் இஸ்லாத்தின் புனிதத் தலமான கஃபா அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் நாளாந்த தொழுகையின்போது கஃபாவை நோக்கியே தொழுகின்றனர்.
2015ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் சவூதி–ஹூதி மோதல், அண்மைய தாக்குதல்களால் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை சவூதியின் கமீஸ் முஷைத், அப்ஹா மற்றும் தாயிஃப் நகரங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Al Jazeera)








