கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமான போரின் போது இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை, சாத்தியமான போர்க்குற்றங்கள் தொடர்பில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட இடங்களில் இருந்து முழுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகத் தோன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நீண்ட காலமாக காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்கள் தொடர்பில் அஞ்சிய குடும்பங்கள், தற்போது தங்களது மிக மோசமான அச்சங்கள் உறுதிப்படுத்தப்படுவதை அறிந்து கொள்வது இதயத்தை நொறுக்கும் விடயமாகும்” என அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், போரின் ஆரம்ப வாரங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியிருக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள், அந்தக் கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளதாக வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் அலுவலகமும் வெளிவிவகார அமைச்சும் இது தொடர்பான கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
பொதுமக்களை திட்டமிட்டு இலக்கு வைத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் தொடர்ந்தும் மறுத்து வருவதுடன், காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்து வருகிறது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய உயிரிழப்புகளை ஏற்படுத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் சுமார் 61 மில்லியன் தொன் கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுகள் குவிந்துள்ளன. அவற்றை அகற்றுவதற்கு ஏழு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் 2025 ஒக்டோபரில் முழு அளவிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்த போதிலும், இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
காசாவில் பரவலான அழிவு
காசா சிவில் பாதுகாப்பு அமைப்பின் தகவலின்படி, 2025 நவம்பர் முதல் காசா முழுவதும் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 630க்கும் மேற்பட்ட சடலங்கள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், 8,000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டிருக்கலாம் என பாலஸ்தீன அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
“இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இருக்கக்கூடும்” என வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் காசாவின் பெரும் பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலிய படைகள் நிலைகொண்டுள்ள சில பகுதிகளிலும் தொடர்ந்து கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள உயிரிழந்தவர்களைப் பொருட்படுத்தாமல்” புல்டோசர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சுன்கே, டிஎன்ஏ பரிசோதனைக் கருவிகள் மற்றும் அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் போன்ற பொருட்களுக்கு இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள், சடலங்களை மீட்கும் மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலின் நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கம், முறையான மற்றும் பாரிய அளவிலான தேடுதல், மீட்பு மற்றும் அடையாளம் காணும் பணிகளை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது” என அவர் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் பாலஸ்தீன மீட்புக் குழுக்கள் தங்களது கைகளால் இடிபாடுகளை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் ஐ.நா. முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை. காசாவுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் COGAT இராணுவ அமைப்பு, பயங்கரவாதக் கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய பொருட்கள் எனக் கூறி, நீண்டகாலமாக சில பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக முன்னர் தெரிவித்திருந்தது.
சர்வதேச விசாரணையாளர்களுக்கு காசாவுக்கான அணுகல்
2023ஆம் ஆண்டு ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 251 பேர் பணயக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் 73,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் உயிரிழப்பதைத் தவிர்ப்பதற்கு தாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாக இஸ்ரேல் கூறுகிறது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஹமாஸ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.
போரின்போது இடம்பெற்ற நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக காசாவின் அனைத்து பகுதிகளுக்கும் சர்வதேச விசாரணையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
முழுமையான இடிபாடு அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என பாலஸ்தீனப் பகுதிகளுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
By ; Afra Ansar
Colombo Times








