சவுதி அரேபியாவில் பொதுமக்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (08) செவ்வாய்க்கிழமை இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு ஹூதிகளிடமிருந்து பகுதிகளை மீட்டெடுப்பதற்காக, சவுதி அரேபியாவின் ஆதரவுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசாங்கம் எதிர்த்தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
யெமனில் போராடும் சவுதி தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி வெளியிட்ட அறிக்கையில், அப்ஹா, கமிஸ் முஷைத், ஜிசான் மற்றும் நஜ்ரான் ஆகிய மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தாக்குதல்கள் எப்போது இடம்பெற்றன என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இந்தத் தாக்குதல்கள் “ஆபத்தான முறையில் தீவிரமடைந்துள்ளதுடன்”, சவுதி அரேபியாவின் இறையாண்மையை “வெளிப்படையாக மீறும் செயல்” என்றும் அல்-மாலிகி தெரிவித்துள்ளார். மேலும், அவை சவுதி குடிமக்கள் மற்றும் அங்கு வசிப்பவர்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் அச்சுறுத்தலுக்கான மூலங்களை இலக்கு வைப்பதற்கும் “தேவையான அனைத்து நடவடிக்கைகளும்” மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சவுதி எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள தனியான அறிக்கையில், நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள பல “எரிசக்தித் துறை வசதிகள் மற்றும் நிலையங்கள்” செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் “பல குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்” காயமடைந்ததுடன், பல இடங்களில் தீப்பரவல்களும் ஏற்பட்டதாகவும், இதனால் சில நடவடிக்கைகள் “தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும்” அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஹூதிகள் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
முன்னதாக, வடக்கு யெமனின் அல்-ஜவ்ஃப் மாகாணத்தில் உள்ள அல்-ஹஸ்ம் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஹூதிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
“யெமனுக்கு எதிரான தொடர்ச்சியான சவுதி ஆக்கிரமிப்பு தண்டிக்கப்படாமல் விடப்படாது” என்றும் ஹூதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ரியாத் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
2014ஆம் ஆண்டு ஹூதிகள் தலைநகர் சனாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து யெமன் மோதலில் சிக்கியது. இதையடுத்து, 2015ஆம் ஆண்டு சவுதி தலைமையிலான இராணுவத் தலையீடு ஆரம்பிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டிருந்தன. எனினும், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போருக்குப் பின்னர் மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன.
சனாவில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஜூலை மாதம் ஹூதிகள் சவுதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவியதை அடுத்து மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன.
அதே மாதத்தின் பிற்பகுதியில், சவுதி அரேபியாவுக்கு எதிராக கடற்படை முற்றுகையை அறிவித்த ஹூதிகள், செங்கடலில் சவுதியுடன் தொடர்புடைய கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர்.
வியாழக்கிழமை, ஹூதிகள் பெரிய அளவிலான தாக்குதலை முன்னெடுத்து, மேற்கு தாய்ஸ் மற்றும் தெற்கு ஹொடைடா பகுதிகள் வழியாக முன்னேறி, துறைமுக நகரமான அல்-மகா (மொச்சா) மற்றும் செங்கடலில் உள்ள பாப் அல்-மந்தப் நீரிணையை நோக்கி நகர முயன்றனர்.
ஆரம்பத்தில் தாய்ஸின் மேற்குப் பகுதி மற்றும் ஹொடைடாவின் தெற்குப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்ற நிலையில், தற்போது அல்-தலே, மாரிப், அல்-ஜவ்ஃப் மற்றும் அல்-பைதா ஆகிய மாகாணங்களுக்கும் மோதல்கள் பரவியுள்ளன.
ஹூதி படைகளை பல்வேறு பகுதிகளில் ஈடுபடச் செய்து, அந்த அமைப்பின் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் சுமார் 1,078 பேர் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், வியாழக்கிழமை முதல் 21,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அல் ஜசீரா)









