பாராளுமன்ற திறந்த ஆட்சி முயற்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ‘Voice to Policy Dialogue’ கலந்துரையாடல் தொடரின் முதல் கட்டம் கண்டியில் நிறைவடைந்துள்ளது.
இதன் மூலம் இளைஞர்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுமார் 40 இளைஞர்கள், எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் உரிமைகள், போதைப்பொருள் பாவனை, தொழில் முயற்சிகள் மற்றும் கண்டியை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுவின் இணைத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தேர்தல் காலங்களைத் தாண்டியும் இளைஞர்கள் கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்பதற்கான அதிக வாய்ப்புகளை பாராளுமன்றம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“இளைஞர்களின் கவலைகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் கேட்கப்படக் கூடாது. அரசாங்க கொள்கைகளை உருவாக்கும் கலந்துரையாடல்களிலும் அவை இடம்பெற வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடலில், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளி தொடர்பில் இளைஞர்கள் சுட்டிக்காட்டினர். வலுவான தொழிற்பயிற்சிகள், கல்வித்துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள் மற்றும் தரமான வேலைவாய்ப்புகளுக்கான அதிக அணுகல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளை, அரசியல் தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகளில் இளம் பெண்கள் அதிகளவில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனை தொடர்பான கலந்துரையாடலில், வேலைவாய்ப்பின்மை மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆதரவு சேவைகளின் பற்றாக்குறை ஆகியவை இதற்கான அடிப்படை காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டன.
கண்டியை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சுற்றுலாத்துறை, தொழில் முயற்சிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு ஆகியவை இதற்கான முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
கண்டியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல், இதற்கு முன்னர் கம்பஹா மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடைபெற்றது.
பிராந்தியங்களுக்கு ஏற்ப சவால்கள் மாறுபட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முயற்சிகள், போக்குவரத்து மற்றும் சமூக நலன் தொடர்பான பிரச்சினைகள் பரவலாக காணப்படுவதாக இந்தக் கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இளைஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகன் ஆகியோரின் பங்களிப்புக்கு சாணக்கியன் நன்றி தெரிவித்ததுடன், அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கான தளத்தை உருவாக்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவுடன் இணைந்து செயற்பட்ட Coalition for Inclusive Impact (CII) அமைப்புக்கும் விசேட நன்றியைத் தெரிவித்தார்.
முதல் கட்ட முயற்சியானது, கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடுவதற்கு இளைஞர்கள் மத்தியில் வலுவான ஆர்வம் காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்தக் கலந்துரையாடல்களின் மூலம் முன்வைக்கப்பட்ட யோசனைகள் உரிய பாராளுமன்ற செயற்பாடுகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதே தற்போது எமது பொறுப்பு” என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.









