இலங்கையில் தனியார் துறை ஊழியர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒன்லைன் மூலம் ரயில் மாதாந்த பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
இதுவரை அரச துறை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, தினசரி பயணத்திற்காக ரயில் சேவையைப் பயன்படுத்தும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பயணிகள் seatreservation.railway.gov.lk என்ற ரயில்வேயின் ஒன்லைன் முன்பதிவு தளத்தின் ஊடாக மாதாந்த பருவச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த புதிய திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவின் பங்கேற்புடன் நேற்று (7) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்னைய நடைமுறையின் கீழ், மாதாந்த பருவச்சீட்டைப் பெற விரும்பும் பயணிகள் முதலில் ரயில்வே அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக விண்ணப்பம், புகைப்படம், வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
மேலும், இந்த சேவை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட காலப்பகுதியில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
புதிய முறையின் கீழ், பயணிகளின் அடையாளமும் பயனர் கணக்கும் சரிபார்க்கப்பட்ட பின்னர், வீட்டிலிருந்தே ஒன்லைன் மூலம் முழுமையான பருவச்சீட்டு நடைமுறையையும் நிறைவு செய்ய முடியும்.
ரயில் முன்பதிவு வசதி உள்ள ரயில் நிலையங்களில் கணக்கு சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
ரயில் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை ரயில்வே மற்றும் SLT-Mobitel ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.









