சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகவும், வருமானம் ஈட்டுவதற்காகவும் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதையும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெரியவர்கள் சிறுவர்களை ஆபத்தான செயற்பாடுகளிலும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களிலும் ஈடுபடுத்துவது தொடர்பில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், அவர்களை ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தூண்டுதல், வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களில் ஈடுபடுத்துதல் மற்றும் பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கங்களுக்கு அவர்களை வெளிப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் பெற்றோர் தமது பிள்ளைகளை வேண்டுமென்றே ஆபத்துகளுக்கு உட்படுத்துவது, அவர்கள் தமது பெற்றோர் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுகின்றனரா என்ற தீவிரமான கேள்வியை எழுப்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோராக இருந்தாலும் சிறுவர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை எனத் தெரிவித்த அவர், பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் பிரபலமடைவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை, போதிய முதிர்ச்சியை அடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களிடமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோரின் பொறுப்பற்ற சமூக ஊடகச் செயற்பாடுகளால் கடுமையான ஆபத்துகளுக்கு உள்ளாகும் சிறுவர்கள், பாதுகாப்பு தேவைப்படும் சிறுவர்களாகக் கருதப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களைப் பாதுகாப்பான பராமரிப்பின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவையும் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சிறுவர்களுக்கு உகந்த ஊடகக் கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருகிறது.
நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதுடன், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகச் சிறுவர்களைப் பயன்படுத்தும் செயற்பாடு சர்வதேச அளவில் ‘Kidfluencing’ என அழைக்கப்படுகிறது.
இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல நாடுகள் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆகியவை சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன் கீழ், சிறுவர்கள் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாக்கப்பட்ட கணக்குகளில் வைப்பிலிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், இத்தகைய செயற்பாடுகளில் சிறுவர்கள் ஈடுபடும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளன.
இலங்கையிலும் இதற்கு ஒத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், டிஜிட்டல் சூழலில் சிறுவர்கள் சுரண்டப்படுவதைத் தடுத்தல், அவர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் நலனை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








