அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்போதான வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, 95 மேலதிக வாக்குகளால் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பும் திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தின் சரத்துகளை சவாலுக்கு உட்படுத்தி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை, சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து இடையீட்டு மனுக்கள் உள்ளிட்ட பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதுதொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (22) சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து, குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நேற்று (24) மற்றும் இன்று (25) நடைபெற்றது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (25) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றது.








