எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர், அதன் நிதித் திட்டங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பாட்டை எட்ட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கலந்துரையாடல்களுக்குப் பின்னர் பணியாளர் மட்ட உடன்பாடு (Staff-Level Agreement) எட்டப்படாததற்கு, வரவு-செலவுத் திட்டத்தை உள்ளடக்கிய அரசாங்கத்தின் நடுத்தர கால நிதிக் கட்டமைப்பு தொடர்பான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளே காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு IMF உடன்பட வேண்டும். IMF உடனான புரிந்துணர்வு இல்லாமல் இந்த வரவு-செலவுத் திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது. அதுதான் யதார்த்தம்” என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனினும், IMF முன்வைக்கும் ஒவ்வொரு முன்மொழிவையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“IMF கூறும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஏற்ப நடனமாட வேண்டிய அவசியமில்லை. இலங்கை IMF-ஐ நாட வேண்டும் என்று முதலில் கூறியவர்களில் நாங்களும் இருந்தோம். ஆனால் IMF கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. எமது நிலைப்பாட்டை வாதிடும் திறன் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பினும், இலங்கையின் IMF திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரந்த நிதிக் கட்டமைப்புக்குள் செயற்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.








