அப்ரா அன்சார்
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து தெளிவுபடுத்தல்
ஹலால் சான்றிதழ் தொடர்பான விழிப்புணர்வையும், அதன் செயற்பாடுகள் குறித்த தெளிவான புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கில், HAC ஹலால் அசஸ்மென்ட் கவுன்சில் (கெரண்டி) லிமிடெட் நிறுவனத்தினால் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள மெரைன் கிரேண்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை இக்கருத்தரங்கு நடைபெற்றது.
இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடுகள், HAC நிறுவனத்தின் வரலாறு, அதன் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
HAC நிறுவனத்தின் வரலாறும் செயற்பாடுகளும்
நிகழ்ச்சி கிராஅத்துடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து, வரவேற்புரை இடம்பெற்றது.
இதனையடுத்து, HAC நிறுவனத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான அஷ்ஷெய்க் எம். இர்பான் முபீன் (றஹ்மானி) விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதன்போது, HAC நிறுவனத்தின் உருவாக்கத்திற்குப் பின்னணியாக அமைந்த வரலாறு, இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட விதம், 1990 முதல் 2003 வரையிலான ஆரம்பகால வரலாறு, 2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற மறுசீரமைப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் காலவரிசைப்படி விளக்கப்பட்டன.
HAC நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், நெருக்கடிகள் மற்றும் அவற்றைக் கடந்து வந்த விதம் தொடர்பிலும் விளக்கக் காட்சிகளுடன் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், நிறுவனத்தின் செயற்பாடுகள் ஊடாக அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானப் பங்களிப்புகள், நிறுவனம் பெற்ற விருதுகள் மற்றும் பாராட்டுகள் தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டன.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள்
ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறைகள் தொடர்பிலும் கருத்தரங்கில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் செயற்பாடுகள் எவ்வாறு பரிசோதிக்கப்படுகின்றன, ஹலால் தரநிலைகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன, HAC நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்பன தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன், நிறுவனத்தின் பணியாளர்கள், தொழில்நுட்பப் பிரிவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான விடயங்களும் விளக்கப்பட்டன.
ஹலால் சான்றிதழ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள்
சமூக ஊடகங்களில் ஹலால் சான்றிதழ் தொடர்பாகப் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் தெளிவுபடுத்தப்பட்டது.
குறிப்பாக, ‘ஹலால் சான்றிதழ் பெறாத எந்தவொரு பொருளையும் வாங்கக்கூடாது. அவை அனைத்தும் ஹராமானவை’ என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையிலான பதிவுகள் மற்றும் சுவரொட்டிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஒரு நிறுவனம் தனது உற்பத்திப் பொருட்களுக்காக ஹலால் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும்போது, உரிய பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படுவதாக HAC நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்காத அல்லது அதனைப் பெற்றுக்கொள்ளாத நிறுவனங்களின் அனைத்து உற்பத்திப் பொருட்களையும் ஒட்டுமொத்தமாக ஹராம் எனக் கூறிவிட முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
எனவே, ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஹலால் சான்றிதழ் நிலவரங்களை HAC நிறுவனத்தின் மென்பொருள், 0117425225 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது www.hac.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்பு
தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊடகவியலாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
ஊடகத்துறையில் நீண்டகால அனுபவமுள்ள மூத்த ஊடகவியலாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில் கேள்வி – பதில் அமர்வு இடம்பெற்றதுடன், கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தமது சந்தேகங்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர். அவற்றுக்கு உரிய விளக்கங்களும் தெளிவுபடுத்தல்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான இராப்போஷண ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வின் முக்கியத்துவம்
ஹலால் என்பது முஸ்லிம்களின் அன்றாட வாழ்வுடனும் நுகர்வுப் பழக்கவழக்கங்களுடனும் தொடர்புடைய முக்கியமான விடயமாகும்.
அதேவேளை, ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகள், நடைமுறைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சரியான புரிதல் சமூகத்தில் நிலவுவதும் அவசியமாகும்.
சமூகத்தின் கருத்துருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஊடகவியலாளர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் தெளிவான அறிவைப் பெற்றிருப்பது அவசியம் என இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
சரியான தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதிலும், தவறான புரிதல்களையும் ஆதாரமற்ற தகவல்களையும் தவிர்ப்பதிலும் ஊடகவியலாளர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்காலத்திலும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்காக இத்தகைய விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஊடகவியலாளர் அஷ்ஷெய்க் ஹைதர் அலி (ஹலீமி) நன்றியுரை நிகழ்த்தினார்.















