அமெரிக்க செனட்டின் முதல் முஸ்லிம் உறுப்பினராக அப்துல் எல்-சயீத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எகிப்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அம்ர் அடிப், தனது எக்ஸ் (X) தளப் பதிவில்,
“அமெரிக்காவைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், அப்துல்ரஹ்மான் மொஹமட் எல்-சயீத் போன்ற ஒருவருக்கு அமெரிக்க செனட்டராகும் வாய்ப்பை வழங்கும் அரசியல் கட்டமைப்பை நாம் பாராட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றுமொரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான யாஸ்மின் எல்-கதீப், எல்-சயீத்தின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அமெரிக்காவில் பல குறைபாடுகள் இருந்தாலும், மத மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து, ஜனாதிபதியின் விருப்பத்திற்கு எதிராகவும் மக்களின் விருப்பம் வெற்றிபெற முடியும் என்பதை இந்தத் தேர்தல் முடிவு உறுதிப்படுத்துகிறது. இது அமெரிக்கா ஒரு சிறந்த நாடு என்பதைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் மகனான அலா முபாரக்கும், எல்-சயீத்தின் வெற்றி உரையின் காணொளியொன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்த உரையின்போது, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அரபு மொழியில் அன்பைக் குறிக்கும் ‘ஹபீபி’ என்ற சொல்லைப் பயன்படுத்தி நகைச்சுவையாக அவர் விளித்திருந்தார்.
மிச்சிகன் மாநிலத்தில் எகிப்தியக் குடியேறிகளான பெற்றோருக்குப் பிறந்த எல்-சயீத், தனது எகிப்தியப் பாரம்பரியம் குறித்து அடிக்கடி பெருமையுடன் பேசி வந்துள்ளார்.
எகிப்திய உணவு வகைகள் மற்றும் நகைச்சுவை உணர்வு குறித்துப் பாராட்டி வரும் அவர், தனது தந்தை வளர்ந்த மத்தியதரைக் கடற்கரை நகரமான அலெக்சாண்ட்ரியாவில் கழித்த கோடை விடுமுறைகளையும் அன்புடன் நினைவுகூர்ந்துள்ளார்.








