இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் குழுவினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து, ஜனாஸா உடல் உறுப்புத் தானம், பிரேத பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மரணித்தவர்களின் (ஜனாஸா) உடல் உறுப்புகளைத் தானம் செய்வது தொடர்பான இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு, வைத்தியசாலைகளில் இடம்பெறும் பிரேத பரிசோதனைகள் மற்றும் வீடுகளில் மரணங்கள் நிகழும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பான இஸ்லாமிய மார்க்க நிலைப்பாடுகள், சட்ட நடைமுறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
இச்சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அரக்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட உதவிப் பொதுச் செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் மற்றும் ஜம்இய்யாவின் பணியாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.








