2,199 மீற்றர் செப்புப் பட்டைகள் மாயம்; பாதுகாப்பு மற்றும் நிதி நிர்வாகக் குறைபாடுகள் குறித்து கோப் குழு கவலை
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக வைத்தியசாலையின் மின்னல் தாக்கப் பாதுகாப்பு கட்டமைப்புக்குச் சொந்தமான 2,199 மீற்றர் செப்புப் பட்டைகள் திருடப்பட்டமையால், 8,442,091 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (21) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள் அழைக்கப்பட்டு, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள், பல்கலைக்கழகத்தின் தற்போதைய செயல்திறன் மற்றும் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டன.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற செப்புப் பட்டைகள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், சிவில் ஒப்பந்தப் பணியாளர் ஒருவரும் கடற்படை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட செப்புப் பட்டைகளின் மொத்த அளவுக்கும் பொலிஸாரால் மீட்கப்பட்ட அளவுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து குழு கேள்வி எழுப்பியது. அத்துடன், நீதிமன்றச் சான்றுப் பொருட்களாகச் சமர்ப்பிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்ட அளவீடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.
வைத்தியசாலையின் சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
வைத்தியசாலை செயற்படத் தொடங்கிய காலம் முதல் சொத்துக்கள் மற்றும் அவற்றின் அளவுகள் தொடர்பான முறையான பதிவுகள் பராமரிக்கப்படாமை, மின்சாரக் கட்டமைப்பு மற்றும் மின்னல் தாக்கப் பாதுகாப்பு முறைமைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் முறையாக நியமிக்கப்படாமை, திட்டமிட்ட பராமரிப்புப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமை ஆகிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மின்னல் தாக்கப் பாதுகாப்புக் கட்டமைப்பை மீளமைக்கும்போது செப்புக் கம்பிகளுக்குப் பதிலாக அலுமினியக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டமை குறித்தும் குழு கேள்வி எழுப்பியது. இதன்போது, குறித்த கட்டமைப்பின் தொழில்நுட்பத் தரங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக உறுதிப்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டது.
800க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட குறித்த வைத்தியசாலையில், சில விடுதிகள், சத்திரசிகிச்சைக் கூடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமை உள்ளிட்ட வைத்தியசாலைச் சேவைகள் தொடர்பான பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்பட்டன.
வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான பற்றாக்குறையும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலையில் தொடரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அது அரச வைத்தியசாலை மாதிரியின் கீழ் இயங்க வேண்டுமா அல்லது தனியார் வைத்தியசாலை மாதிரியின் கீழ் இயங்க வேண்டுமா என்பதை நிர்வாக அதிகாரிகள் விரைவாகத் தீர்மானித்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனக் குழு அறிவுறுத்தியது.
இது தொடர்பில் தெளிவான தீர்மானமொன்றை எடுத்து உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தவறினால், தற்போதைய பிரச்சினைகள் மேலும் மோசமடையக்கூடும் என்றும் குழு எச்சரித்தது.
வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளுக்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவது, கேட்போர் கூட நிர்மாணப் பணிகள் நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ளமை மற்றும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவனமான CUE Technologies Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகள் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள் குறித்தும் ஆராயப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அடையாளம் காணப்பட்ட நிர்வாக மற்றும் முகாமைத்துவக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணவும், நடைமுறையிலுள்ள பல்கலைக்கழகச் சட்டத்தில் தாமதமின்றித் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
முன்னர் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு, சட்டத் திருத்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. உரிய சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது.
வைத்தியசாலையின் செயற்பாட்டுத் திறனை அதிகரித்தல், பணியாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல், மருந்து முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகத்தின் நிதி, நிர்வாகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொதுநிதி மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டுமெனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான், சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கமாண்டர் பிரகீத் மதுரங்க, ஜகத் மனுவர்ண, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான, திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தினேஷ் ஹேமந்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முப்படைகளின் தளபதிகள் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் குழுவினரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.









