தென்கொரியாவில் வரி கணக்கியல் தகுதிப் பரீட்சையில் முதலிடம் பெற்ற ஒருவர், சிறிய ரக கமரா, ஸ்மார்ட்போன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரீட்சையில் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
34 வயதான ஹான் வொன்-சியோக் (Han Won-seok), தனது சட்டத்தரணி லீ டொன்-ஹோவின் (Lee Don-Ho) யூடியூப் அலைவரிசையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட காணொளியில் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
குறித்த பரீட்சையின் முதலாம் சுற்றில் 400 புள்ளிகளுக்கு 397.5 புள்ளிகளைப் பெற்று அவர் அபாரமான பெறுபேற்றைப் பதிவு செய்திருந்தார். மொத்தம் 160 வினாக்களில் 159 வினாக்களுக்கு அவர் சரியான பதில்களை வழங்கியிருந்தார்.
அவரது அசாதாரணமான பெறுபேறு சந்தேகங்களையும் இணையத்தில் பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில், பரீட்சையின் இரண்டு சுற்றுகளிலும் மின்னணு சாதனங்கள் மற்றும் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக ஹான் ஒப்புக்கொண்டுள்ளார்.
பரீட்சை வினாத்தாள்களைச் சிறிய ரக கமரா மூலம் புகைப்படம் எடுத்து, அவற்றை செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புக்கு அனுப்பி, கிடைத்த பதில்களைத் தனது ஸ்மார்ட்போன் மூலம் சரிபார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் மோசடி குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், பின்னர் தனது முடிவை மாற்றி உண்மையை ஒப்புக்கொள்ளத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பரீட்சையில் இரண்டாம் இடத்தைப் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சிந்தித்ததன் பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும், நேர்மையான முறையில் பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய பரீட்சார்த்திகளிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தொடர்ந்து, தென்கொரிய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சும் மனிதவள அபிவிருத்தி சேவையும் அவசரக் கூட்டமொன்றைக் கூட்டி சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பரீட்சையில் மோசடி செய்தமை உறுதிப்படுத்தப்படும் பரீட்சார்த்திகளின் தகுதிகள் இரத்துச் செய்யப்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, ஹானின் சட்டத்தரணி ஊடாக எழுத்துமூல ஒப்புதல் வாக்குமூலம் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள சியோல் பெருநகர பொலிஸ் நிறுவனம், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனது பெற்றோர் பெருமைப்படும் வகையில் நல்லதொரு தொழிலைப் பெற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பரீட்சையில் மோசடி செய்ததாக ஹான் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் கடுமையான போட்டி நிறைந்த பரீட்சைக் கட்டமைப்பில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாதனங்களைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவது தொடர்பான புதிய கவலைகளை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.







