கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகம், கல்வி நடவடிக்கைகள் மற்றும் கத்தோலிக்க சமயக் கல்விக்கான ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காண்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிறிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகம், கல்வி தொடர்பான விடயங்கள் மற்றும் கத்தோலிக்க சமயக் கல்விக்கான ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னர் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் சிலாபம் மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஹரோல்ட் அன்டனி பெரேரா உள்ளிட்ட பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் டபிள்யூ.ஏ. நீலிகா பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜி.ஐ. சஞ்சீவனி, சுற்றாடல் அமைச்சின் அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் டி.பி.சி. உதய குமார, எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. ஸ்ரீமோகனன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.








