முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளதுடன், அதற்கு அப்பால் அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் எதுவும் இல்லை என விமர்சித்துள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவ முன்னெடுப்பின் VORTEX ஐந்தாவது தொகுதி வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்திடம் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை சிறப்பானது எனத் தெரிவித்த அவர், அதற்கு அப்பால் அரசாங்கத்திடம் வேறு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், ஒரு வர்க்கத்தினருக்கு எதிராக மற்றொரு வர்க்கத்தினரிடையே வெறுப்பைத் தொடர்ந்து தூண்டுவதைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எதுவும் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்திய சந்திரிகா, அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் வரை காத்திருக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு வாக்களிக்குமாறு மக்களிடம் கோர முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை இயற்கை வளங்களால் செழிப்பான நாடாகவும், கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் காரணமாக உயர்ந்த மனித வளத்தைக் கொண்ட நாடாகவும் இருந்தபோதிலும், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான முக்கிய காரணம், இலங்கையர்களால் ஒரே தேசமாக ஒன்றிணைய முடியாமல் போனமையே எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், முந்தைய நாடாளுமன்றத்தில் சுமார் 20 உறுப்பினர்கள் மாத்திரமே பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததாகவும், பெரும்பாலானோர் உயர்தரப் பரீட்சையைக்கூட நிறைவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சமத்துவமின்மையே இலங்கை உண்மையான வளர்ச்சியையும் மகத்துவத்தையும் அடைவதற்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.








