எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்குப் போதிய சலுகைகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை மறுதினம் அறிவிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், அதன்பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சந்தித எப்பிட்டகடுவ தெரிவித்துள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இன்று முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக எமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.
வைத்தியர்களுக்கு 25,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும், அது போதுமானதல்ல எனக் கூறி வைத்தியர்கள் மேலதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைக் கோரிப் போராட்டம் நடத்துவதாகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இது மிகவும் பாரபட்சமான செயற்பாடாகும்” என்றார்.
எதிர்வரும் 30ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்ற நிலையில், அதில் GMOA இணையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“அது தொடர்பான எமது தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள எமது கிளைச் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். அதன்பின்னரே நாம் எத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
27ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்பட்டால் நல்லது. பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு கிடைத்தாலும் நல்லது.
எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினைகளை வரவு செலவுத் திட்டக் காலத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப் போவதில்லை. சாதாரண நோயாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்திற்கு எமது நிலைப்பாட்டை உணர்த்தக்கூடிய நடவடிக்கையொன்றை முன்னெடுப்போம். ஆனால், இறுதியில் சாதாரண நோயாளர்களைப் பலிகொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கும்” என்றார்.







