வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினத்தைத் தேசிய எதிர்ப்பு நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்கவுள்ளனர்.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுராத சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்றைய தினம் கறுப்பு ஆடை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளதாக தரம்பெற்ற அதிபர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தைப் புறக்கணித்துச் செயற்படுவதே இத்தகைய பிரச்சினைகளுக்குக் காரணம் என அகில இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் உதயனி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கோ எவ்வித தீர்வுகளையும் வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் லசித கன்னங்கர குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரச தாதியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால், பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.








