கொழும்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புத் தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக, முத்துவெல்ல கடற்கரையை அண்மித்த 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் JCT எண்ணெய்த் தொட்டி இலக்கம் 108இல் இந்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.சுமார் 1,000 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட குறித்த சேமிப்புத் தொட்டி, கசிவு ஏற்பட்ட சமயத்தில் முழுமையாக நிரம்பியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சேதமடைந்த வடிகால் வால்வு ஊடாக மரைன் கேஸ் ஒயில் (Marine Gas Oil – MGO) கசிந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கசிந்த எண்ணெய் நகராட்சி வடிகால் வாய்க்காலினுள் நுழைந்து, முத்துவெல்ல கடற்கரையிலுள்ள நீர் வெளியேற்றுப் பாதை ஊடாகக் கடலில் கலந்துள்ளது.
இதன் காரணமாக, படகுகள் தரையிறங்கும் இடம் உள்ளிட்ட 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதிகள் எண்ணெய் மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் காலை 9.30 மணியளவில் அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) காலை 10.30 மணியளவில் எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தியுள்ளது.
எனினும், அதற்குள் கணிசமான அளவு எண்ணெய் வடிகால் கட்டமைப்பினுள் நுழைந்து கடலைச் சென்றடைந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ், இலங்கை துறைமுக அதிகாரசபையும் இலங்கை கடலோரக் காவல் படையும் இணைந்து எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
எண்ணெய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காகக் கடலில் மிதக்கும் தடுப்புகள் (Oil Containment Booms) அமைக்கப்பட்டுள்ளதுடன், கசிந்த எண்ணெயை மீட்டெடுத்து அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 22ஆம் திகதி வரை சுத்திகரிப்புப் பணிகள் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ள அதிகாரசபை, சுற்றாடல் பாதிப்பைக் குறைப்பதற்கும் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளை மீளமைப்பதற்கும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் கசிந்த எண்ணெயின் துல்லியமான அளவு இதுவரை வெளியிடப்படவில்லை.








