75ஆவது சர்வதேசப் பிரபஞ்ச அழகிப் போட்டியில், புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ 2026ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடியுள்ளார்.
116 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்று, புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நேற்று (24) நடைபெற்றது. இதன்போது ஜெனிபர் பாரெட்டோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
போட்டியின் பல்வேறு சுற்றுகளைக் கடந்து இறுதியில் வெற்றியைத் தனதாக்கிய அவருக்கு, வெனிசுலா நகை வடிவமைப்பாளர் ஜோர்ஜ் விட்டெல்ஸ் வடிவமைத்த ‘நித்திய மரபின் ஒளி’ (The Radiance of Eternal Legacy) என்ற மகுடம் அணிவிக்கப்பட்டது.
3,150 வைரங்களைக் கொண்ட இந்த மகுடம், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரபஞ்ச அழகிக்கு அணிவிக்கப்பட்டது.
இதேவேளை, 48ஆவது இலங்கைப் பிரபஞ்ச அழகியான நிம்ஹாரா சசிந்தி, 2026ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







