சர்வதேச ஆண்கள் தினம் இன்று (19) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆண்களும் சிறுவர்களும் ஆற்றிவரும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதுடன், அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியம் தொடர்பான சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் இத்தினம், நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை உருவாக்குதல், பொறுப்பான தந்தையர் பங்களிப்பு, ஆண்களின் நலன் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆண்கள் தினத்தின் தொனிப்பொருள் ‘எதிர்காலம் அனைவருக்கும்’ (The Future Is Everyone) என்பதாகும்.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறக்கூடிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை இந்தத் தொனிப்பொருள் எடுத்துரைக்கிறது.
நவம்பர் 19ஆம் திகதி ஏன் சர்வதேச ஆண்கள் தினமாகத் தெரிவு செய்யப்பட்டது?
தற்போதைய வடிவிலான சர்வதேச ஆண்கள் தினம் 1999ஆம் ஆண்டு டொக்டர் ஜெரோம் டீலுக்சிங் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டைச் சேர்ந்த வரலாற்றுத்துறை விரிவுரையாளராவார்.
தனது தந்தையின் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையிலும், 1989ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியின்போது டிரினிடாட் மற்றும் டொபாகோவின் தேசிய கால்பந்தாட்ட அணி ஒட்டுமொத்த நாட்டையும் ஒன்றிணைத்த தினத்தை நினைவுகூரும் வகையிலும் நவம்பர் 19ஆம் திகதியை அவர் தெரிவு செய்தார்.
ஆண்களின் நேர்மறையான பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டாலும், ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வ சர்வதேச தினமாக இது அங்கீகரிக்கப்படவில்லை.
இலங்கையின் ஆண் மக்கள் தொகை தொடர்பான 7 முக்கிய புள்ளிவிவரங்கள்
சர்வதேச ஆண்கள் தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் நிலையில், இலங்கையின் 2024ஆம் ஆண்டு குடிசன மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்புத் தரவுகள் ஆண் மக்கள் தொகை தொடர்பான பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
1. இலங்கையில் 1.05 கோடிக்கும் அதிகமான ஆண்கள்
2024ஆம் ஆண்டு குடிசன மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகையான 21,781,800 பேரில் 10,512,344 பேர் ஆண்களாவர்.
2. மொத்த மக்கள் தொகையில் 48.3 வீதமானோர் ஆண்கள்
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 48.3 வீதமாகவும், பெண்கள் 51.7 வீதமாகவும் உள்ளனர் என சமீபத்திய குடிசனக் கணக்கெடுப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
3. பெண்களை விட 757,112 ஆண்கள் குறைவு
கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 11,269,456 பெண்களும் 10,512,344 ஆண்களும் உள்ளனர்.
இதற்கமைய, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை 757,112 ஆல் அதிகமாகக் காணப்படுகிறது.
4. ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 93 ஆண்கள்
இலங்கையின் பாலின விகிதத்தின்படி, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் சுமார் 93.3 ஆண்கள் உள்ளனர்.
2012ஆம் ஆண்டு இந்த விகிதம் 93.8 ஆகப் பதிவாகியிருந்தது.
5. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பெண்களே அதிகம்
2024ஆம் ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களிலும் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
இது நாடளாவிய ரீதியில் காணப்படும் முக்கியமான மக்கள் தொகை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
6. தற்கொலை மரணங்களில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் ஆண்கள்
2024ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸ் புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் மொத்தம் 3,285 தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளன.
இவர்களில் 2,664 பேர் ஆண்களாகவும், 621 பேர் பெண்களாகவும் உள்ளனர்.
இதற்கமைய, பதிவான தற்கொலை மரணங்களில் சுமார் 81 வீதமானவை ஆண்களுடன் தொடர்புடையவையாகும்.
ஆண்களின் உள ஆரோக்கியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
7. ஆண்களின் தற்கொலை விகிதம் பெண்களை விட ஐந்து மடங்குக்கும் அதிகம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, இலங்கையில் ஒவ்வொரு ஒரு இலட்சம் ஆண்களிலும் சுமார் 27 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அதேவேளை, பெண்களிடையே இந்த விகிதம் ஒரு இலட்சத்திற்கு ஐந்து பேராகப் பதிவாகியுள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தற்கொலை மரண விகிதத்தில் காணப்படும் குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும், உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தையும் இந்தத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆண்களின் பங்களிப்புகளை அங்கீகரித்தல்
தந்தையர், கணவர்கள், சகோதரர்கள், மகன்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் முக்கிய பங்களிப்புச் செய்யும் அனைத்து ஆண்களையும் கௌரவிப்பதும் சர்வதேச ஆண்கள் தினத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.
நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை உருவாக்குதல், குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஆண்களின் உடல், உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றையும் இத்தினம் ஊக்குவிக்கிறது.
சர்வதேச ஆண்கள் தினம் என்பது சர்வதேச மகளிர் தினத்துடன் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அதேவேளை, ஆண்கள் மற்றும் சிறுவர்களின் நலனையும் உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆண்கள் தினத்தை இலங்கை அனுஷ்டிக்கும் இன்றைய தினம், நாட்டிலுள்ள 1.05 கோடிக்கும் அதிகமான ஆண்களின் பங்களிப்புகளைக் கௌரவிப்பதுடன், அவர்களின் ஆரோக்கியம், பொறுப்புகள், சவால்கள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.







