அப்ரா அன்சார்
துருக்கி குடியரசின் 103 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான துருக்கித் தூதுவர் கலாநிதி செமிஹ் லுத்ஃபி துர்குட், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
துருக்கி குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
துருக்கி குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டமை அந்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், முஸ்தபா கெமால் அட்டாதுர்க்கின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போருக்குப் பின்னர், தேசிய இறைமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அத்தியாயத்தைத் துருக்கிய மக்கள் ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அரச மரபைக் கொண்ட துருக்கி, தனது வரலாற்றுப் பாரம்பரியத்தின் வலிமையையும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கிய ஒரு தேசத்தின் எதிர்பார்ப்புகளையும் ஒருங்கிணைத்து குடியரசை உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அட்டாதுர்க்கின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான சீர்திருத்தங்கள் நவீன அரசுக்கான அடித்தளங்களை அமைத்ததாகவும், அந்த மாற்றத்தின் பயணம் இன்றும் துருக்கியின் தேசிய வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகத் தொடர்வதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நூற்றாண்டில் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் துருக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், இந்தச் சாதனைகள் நாட்டின் தேசிய ஆற்றல்களை வலுப்படுத்தி சர்வதேச அரங்கில் அதன் நிலையை உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியும் இராஜதந்திரமும் துருக்கியின் வெளியுறவுக் கொள்கையின் அடித்தளங்கள்
“உள்நாட்டில் அமைதி, உலகில் அமைதி” என்ற துருக்கியின் ஸ்தாபகத் தலைவர் முஸ்தபா கெமால் அட்டாதுர்க்கின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, துருக்கி தனது வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து வருவதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலைமைகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை, இராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு துருக்கி முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சந்திப்புப் புள்ளியில் அமைந்துள்ள துருக்கி, தனது வரலாற்று அனுபவங்களையும் பல்வேறு பிராந்தியங்களுடனான நீண்டகால உறவுகளையும் பயன்படுத்தி சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்குப் பங்களித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான இராஜதந்திர முயற்சிகளில் துருக்கி தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாடு
பலஸ்தீன மக்களின் துயரங்களுக்கு முடிவுகட்டுதல், பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றைத் துருக்கி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தத்தைப் பாதுகாப்பதற்கும் நிலையான அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்குமான இராஜதந்திர முயற்சிகளில் துருக்கி பங்களித்துள்ளதாகவும், நீதியானதும் நீடித்ததுமான அமைதியை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகள் தீர்வுத் திட்டம் அவசியம் என்ற நிலைப்பாட்டைத் துருக்கி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போருக்குத் தீர்வு காணும் நோக்கில் இரு தரப்பினருடனும் துருக்கி தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வருவதாகவும், நீதியானதும் நீடித்ததுமான அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
COP31 மாநாட்டை நடத்தும் துருக்கி
2026 நவம்பரில், ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் 31ஆவது பங்குதாரர்கள் மாநாட்டை (COP31) துருக்கி, அந்தல்யா நகரில் நடத்தவுள்ளதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று, சர்வதேச காலநிலை மாற்ற உறுதிமொழிகளை நடைமுறை ரீதியானதும் நீடித்ததுமான பெறுபேறுகளாக மாற்றுவதற்கான முயற்சிகளைத் துருக்கி முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1864 முதல் தொடரும் இலங்கை – துருக்கி உறவுகள்
துருக்கியின் வெளியுறவுக் கொள்கையில் ஆசியா அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள தூதுவர், ஆசியக் கண்டத்துடனான உறவுகளை விரிவுபடுத்துவதற்காக துருக்கி 2019ஆம் ஆண்டு ‘Asia Anew Initiative’ என்ற முன்னெடுப்பை ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்த முன்னெடுப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1864ஆம் ஆண்டு ஆரம்பமான இலங்கை – துருக்கி இருதரப்பு உறவுகள் தற்போது அரசியல் கலந்துரையாடல், வர்த்தகம், பாதுகாப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பன்முகக் கூட்டாண்மையாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்தக் கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திய உயர்மட்டச் சந்திப்புகள்
கடந்த ஆண்டில் இலங்கை – துருக்கி உறவுகளில் பல முக்கிய முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் ஹக்கான் ஃபிதான், பாகுவில் நடைபெற்ற ஏழாவது CICA உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக, இலங்கையின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026 மே 5ஆம் திகதி அங்காராவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு, இணைப்புத்தன்மை, கடல்சார் விவகாரங்கள், கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த காலத்தில் இலங்கைக்கு துருக்கியின் ஆதரவு
இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியைத் தொடர்ந்து, துருக்கி இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியதாகத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவரகமான TİKA, 3,000 பெட்டிகளில் மனிதாபிமான உதவிப் பொருட்களை விரைவாக வழங்கியதுடன், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புனரமைப்புத் திட்டங்களையும் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கிய எயார்லைன்ஸ் நிறுவனம், இஸ்தான்புல் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம், பயணத் தடைகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் ஆதரவளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துருக்கிய மனிதாபிமான அமைப்புகள், TİKA மற்றும் துருக்கி மத விவகாரங்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ரமழான் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் காலங்களில் உதவிப் பொதிகளை விநியோகித்துள்ளதாகவும், மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்ட இலங்கை வைத்தியசாலைகளுக்கு துருக்கியத் தூதரகம் மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலாசாரப் பரிமாற்றம் மூலம் வலுப்பெறும் நட்புறவு
இலங்கை – துருக்கி உறவுகளில் கலாசாரப் பரிமாற்றம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள தூதுவர், இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2025 நவம்பரில் ஷங்ரி-லா கொழும்பிலும், 2026 ஜூனில் ஹில்டன் கொழும்பிலும் நடைபெற்ற துருக்கிய உணவுத் திருவிழாக்கள், துருக்கியின் பாரம்பரிய உணவு வகைகளை இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தின.
2026 ஜூனில், வரலாற்றுச் சிறப்புமிக்க காலி முகத்திடல் ஹோட்டலில் துருக்கிய காலை உணவு தின நிகழ்வும் நடைபெற்றது.
2025 நவம்பரில் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெற்ற அனடோலிய துருக்கிய இசைக் குழுவின் நிகழ்ச்சி, இரு நாடுகளின் கலாசாரங்களை இசையின் ஊடாக நெருக்கமாக்கியது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களைப் பங்கேற்கச் செய்து வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
2026 ஜனவரியில் ரோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தில் கோல்ஃப் போட்டியொன்றும் நடத்தப்பட்டது.
அதே ஆண்டு ஏப்ரலில், டெய்லி மிரர் பத்திரிகையுடன் இணைந்து ‘எனது மறக்க முடியாத ரமழான் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மேல் மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை ஊடகவியலாளர்களுக்குத் துருக்கியில் பயிற்சி
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், நவீன ஊடகச் சூழலில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்துவதற்காகவும் துருக்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
2026 ஏப்ரலில், TİKA மற்றும் TRT நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், இலங்கை முஸ்லிம் ஊடக மன்றத்தைச் சேர்ந்த 10 ஊடகவியலாளர்கள் அங்காராவில் நடைபெற்ற ‘இலங்கை புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சித் திட்டத்தில்’ பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயிற்சித் திட்டம், வேகமாக மாற்றமடைந்து வரும் ஊடகச் சூழலில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலக்கியம் மற்றும் இளைஞர் பரிமாற்றம்
இலங்கை – துருக்கி உறவுகளை வலுப்படுத்துவதில் இலக்கியமும் முக்கிய பங்காற்றி வருவதாகத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கிய எழுத்தாளர்களான தூதுவர் செமிஹ் லுத்ஃபி துர்குட் மற்றும் ஹக்கான் அக்டோகன் ஆகியோரின் நாவல்கள் சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் துருக்கிய இலக்கியங்களை இலங்கை வாசகர்கள் அணுகுவதற்கான வாய்ப்புகள் விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு இலக்கிய விழா மற்றும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் துருக்கி பங்கேற்றதன் மூலம், துருக்கிய எழுத்தாளர்களுக்கும் இலங்கை வாசகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2016 ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவகத்துடன் இணைந்து விசேட சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இளைஞர் அமைதிக் கூட்டமைப்புடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம், இலங்கை இளைஞர்களுக்கு இராஜதந்திரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அறிமுகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் இருதரப்பு ஒத்துழைப்பு
இலங்கை – துருக்கி நட்புறவு என்பது உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளுக்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்துள்ள தூதுவர் செமிஹ் லுத்ஃபி துர்குட், இரு நாடுகளினதும் அரசியல் உறுதிப்பாட்டுடன் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கடல்சார் விவகாரங்கள், எரிசக்தி, கல்வி, சுற்றுலா மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
துருக்கி குடியரசின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, துருக்கி மற்றும் துருக்கிய மக்களுடன் இலங்கை அரசாங்கமும் மக்களும் பேணிவரும் நட்பு, அன்பு மற்றும் நல்லெண்ணத்திற்காக நன்றியைத் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறவும், இருதரப்புக் கூட்டாண்மை தொடர்ந்து செழிப்படையவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
துருக்கி குடியரசின் 103ஆவது ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.






