அப்ரா அன்சார்
துருக்கியில் நடைபெறும் அந்தல்யா இராஜதந்திர மன்றம் (Antalya Diplomacy Forum – ADF), 2027 ஏப்ரல் 2 முதல் 4ஆம் திகதி வரை ‘ஒன்றிணைந்து சிந்திப்போம், ஒன்றிணைந்து செயல்படுவோம்’ (Think Together, Act Together) என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
சர்வதேச உறவுகளில் உருவாகிவரும் சிக்கலான சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்தத் தொனிப்பொருள் அமைந்துள்ளது.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதிகரித்துவரும் உலகளாவிய நெருக்கடிகள் நிலவும் தற்போதைய சூழலில், நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் இராஜதந்திரமே மிகவும் பயனுள்ள கருவி என்பதை இந்த மன்றம் மீண்டும் வலியுறுத்தவுள்ளது.
துருக்கி ஜனாதிபதியின் அனுசரணையில் மன்றம்
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் அனுசரணையில், துருக்கி வெளிவிவகார அமைச்சினால் இந்த மன்றம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
2021ஆம் ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்டதிலிருந்து, அந்தல்யா இராஜதந்திர மன்றம் உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள், சிரேஷ்ட இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் முக்கிய சர்வதேச தளமாக வளர்ச்சியடைந்துள்ளது.
சர்வதேசக் கண்ணோட்டங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், வளர்ந்துவரும் புவிசார் அரசியல் மாற்றங்களை மதிப்பீடு செய்வதற்கும், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிதலை வலுப்படுத்துவதற்கும் இந்த மன்றம் வாய்ப்பளித்து வருகின்றது.
150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 5,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு
2026 ஏப்ரல் 17 முதல் 19ஆம் திகதி வரை, ‘நாளைய உலகை வரைபடமிடுதல், நிச்சயமற்ற நிலைமைகளை நிர்வகித்தல்’ (Mapping Tomorrow, Managing Uncertainties) என்ற தொனிப்பொருளில் அந்தல்யா இராஜதந்திர மன்றத்தின் முந்தைய அமர்வு நடைபெற்றது.
உலகளாவிய அதிகாரச் சமநிலைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பில் உருவாகியுள்ள சவால்களுக்கு மத்தியில், கணிக்க முடியாத உலகச் சூழலில் இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான தளமாக அந்த மன்றம் அமைந்தது.
அந்த அமர்வில் 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சுமார் 15 துணை அரச தலைவர்கள் மற்றும் துணை அரசாங்கத் தலைவர்கள், 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அவர்களில் 40 வெளிவிவகார அமைச்சர்கள், அத்துடன் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் பன்முகத்தன்மையும் இந்த மன்றத்தின் சர்வதேச முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும், உலகளாவிய சவால்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் அதன் ஆற்றலையும் எடுத்துக்காட்டுகின்றன.
சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 2027 மன்றம்
முந்தைய ஐந்து அமர்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அந்தல்யா இராஜதந்திர மன்றத்திலும் தென்கிழக்கு ஆசியா முதல் இலத்தீன் அமெரிக்கா வரையிலும், வட அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரையிலும், ஐரோப்பா முதல் ஆசிய – பசிபிக் பிராந்தியம் வரையிலும் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உரையாடலை ஊக்குவித்தல், அர்த்தமுள்ள கூட்டாண்மைகளைக் கட்டியெழுப்புதல் மற்றும் பகிரப்பட்ட கருத்துகளை ஒருங்கிணைந்த நடவடிக்கைகளாக மாற்றுதல் ஆகியவற்றின் ஊடாக, சர்வதேச அமைதி மற்றும் ஒத்துழைப்பின் அடித்தளமாக இராஜதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.
உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் பரஸ்பர புரிதலையும் மேம்படுத்துவதற்கான முக்கிய சர்வதேச தளமாக அந்தல்யா இராஜதந்திர மன்றம் தொடர்ந்து செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








