அப்ரா அன்சார்
துருக்கியில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் முதல் தங்குமிடம், மாதாந்தக் கொடுப்பனவு மற்றும் விமானப் பயணச் சீட்டுகள் வரை பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் முழுமையான புலமைப்பரிசில் திட்டமாக ‘Türkiye Scholarships’ (Türkiye Bursları) அமைந்துள்ளது.
தரமான உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சமமான வாய்ப்புகளை, குறிப்பாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கல்வியின் ஊடாக சர்வதேச ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் துருக்கி கொண்டுள்ள உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இத்திட்டம் அமைந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் சராசரியாக 125,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.
2026ஆம் ஆண்டில், உலகளாவிய ரீதியில் சுமார் 200,000 விண்ணப்பங்களைப் பெற்று இத்திட்டம் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இதுவரை உலகின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த 150,000க்கும் அதிகமான பட்டதாரிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இவர்கள் துருக்கிக்கும் தமது சொந்த நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
100க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பயன்
2002ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, 100க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் துருக்கியில் புலமைப்பரிசில் பெற்று உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் அறிவுசார் தொடர்புகளை வலுப்படுத்தும் பாலங்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.
புலமைப்பரிசில் மூலம் கிடைக்கும் வசதிகள்
‘Türkiye Scholarships’ திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு விரிவான நிதி மற்றும் கல்வி ஆதரவு வழங்கப்படுகின்றது.
இதன் கீழ்,
* பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறியைத் தெரிவுசெய்து ஒதுக்குதல்.
* முழுமையான கல்விக் கட்டணச் சலுகை.
* மாதாந்தக் கொடுப்பனவு.
* தங்குமிட வசதி.
* மருத்துவக் காப்புறுதி.
* துருக்கிக்குச் செல்வதற்கும் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்குமான விமானப் பயணச் சீட்டுகள்.
* ஓராண்டு துருக்கிய மொழிப் பயிற்சி.
ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் துருக்கியின் கல்விச் சூழலுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் இலகுவாகப் பழகிக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு ஓராண்டு துருக்கிய மொழிப் பயிற்சியும் வழங்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக, கலாசாரச் சுற்றுப்பயணங்கள், கல்விசார் மாநாடுகள், பயிற்சிப் பணிகள் மற்றும் தொழில்முறைத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இவை மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தொழில்முறை முன்னேற்றத்துக்கும் உதவுகின்றன.
விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகைமைகள்
இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் தொடர விரும்பும் கற்கைநெறிக்கு ஏற்ப குறிப்பிட்ட கல்வித் தகைமைகளையும் வயது வரம்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச கல்விச் சாதனை:
* இளங்கலைப் பட்டப்படிப்புகள்: குறைந்தபட்சம் 70 சதவீத கல்விச் சாதனை.
* முதுகலை மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகள் (PhD): குறைந்தபட்சம் 75 சதவீத கல்விச் சாதனை.
* மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்தியல்: குறைந்தபட்சம் 90 சதவீத கல்விச் சாதனை.
வயது வரம்புகள்
விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்புகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
* இளங்கலைப் பட்டப்படிப்புகள்: 21 வயதுக்குக் குறைவானவர்கள்.
* முதுகலைப் பட்டப்படிப்புகள்: 30 வயதுக்குக் குறைவானவர்கள்.
* கலாநிதிப் பட்டப்படிப்புகள் (PhD): 35 வயதுக்குக் குறைவானவர்கள்.
* ஆராய்ச்சித் திட்டங்கள்: 50 வயதுக்குக் குறைவானவர்கள்.
விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தின்போது பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
1. தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு போன்ற செல்லுபடியாகும் அடையாள ஆவணம்.
2. கடந்த ஓராண்டுக்குள் எடுக்கப்பட்ட அண்மைய புகைப்படம்.
3. பட்டச் சான்றிதழ் அல்லது தற்காலிகப் பட்டமளிப்புச் சான்றிதழ்.
4. கல்விப் பெறுபேற்றுப் பட்டியல்.
5. கிடைக்கப்பெற்றிருந்தால் தேசிய பரீட்சைப் பெறுபேறுகள்.
6. தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கற்கைநெறி கோரினால் GRE, GMAT அல்லது SAT போன்ற சர்வதேசப் பரீட்சைப் பெறுபேறுகள்.
7. தேவைக்கேற்ப TOEFL அல்லது DELF போன்ற சர்வதேச மொழித் திறன் பரீட்சைப் பெறுபேறுகள்.
8. கலாநிதிப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆராய்ச்சித் திட்ட முன்மொழிவு மற்றும் முன்னர் மேற்கொண்ட கல்விசார் ஆராய்ச்சியின் மாதிரி ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சில ஆவணங்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அல்லது கற்கைநெறியின் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் முற்றிலும் இலவசமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் துருக்கி புலமைப்பரிசில் திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.turkiyeburslari.
விண்ணப்பம் முதல் கல்வி ஆண்டு ஆரம்பம் வரை
இத்திட்டத்திற்கான பொதுவான கால அட்டவணையின்படி,
* விண்ணப்பங்கள்: ஜனவரி 10 முதல் பெப்ரவரி 20 வரை.
* விண்ணப்பங்கள் மதிப்பீடு: மார்ச் முதல் ஏப்ரல் வரை.
* நேர்முகத் தேர்வுகள்: ஏப்ரல் முதல் ஜூன் வரை.
* பெறுபேறுகள் அறிவித்தல்: ஓகஸ்ட் மாத முற்பகுதி.
* புலமைப்பரிசில் ஒப்பந்தங்கள் மற்றும் விசா நடவடிக்கைகள்: ஓகஸ்ட் மாதம்.
* கல்வியாண்டு ஆரம்பம்: செப்டெம்பர் மாதம்.
மேற்கண்ட கால அட்டவணை பொதுவான வழிகாட்டலாகும். விண்ணப்பிப்பதற்கு முன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சம்பந்தப்பட்ட கல்வியாண்டுக்கான அறிவிப்புகளையும் திகதிகளையும் சரிபார்ப்பது அவசியமாகும்.
கல்வி என்பது நாடுகளுக்கு இடையில் நீடித்த நட்புறவைக் கட்டியெழுப்புவதற்கும், பொதுவான முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும் வலிமையான கருவி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் துருக்கி இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.







