நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்யும் புதிய நடைமுறையின் கீழ், 1,391,830 பேர் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2025 டிசம்பர் 15ஆம் திகதியிடப்பட்ட 2497/03 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் ‘தீவிர வறுமைக்கோடு’ (Extreme Poor) மற்றும் ‘வறுமைக்கோடு’ (Poor) ஆகிய இரு பிரிவுகளுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது பட்டியலில் மொத்தம் 991,800 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில், மாதாந்தம் 17,500 ரூபாய் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதி பெற்ற ‘தீவிர வறுமைக்கோடு’ பிரிவில் 363,142 பேரும், மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதி பெற்ற ‘வறுமைக்கோடு’ பிரிவில் 628,658 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள இரண்டாவது பெயர்ப்பட்டியலில் 740,127 குடும்பங்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை அவற்றைச் சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை நிறைவடைந்த பின்னர், தகுதிபெறும் புதிய பயனாளிகளை உள்ளடக்கிய இரண்டாவது பெயர்ப்பட்டியலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிட நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளது.








