நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஈரானிலிருந்து இலங்கைக்குத் தார் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏற்பட்டுள்ள தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாற்று நாடுகளிலிருந்து தார் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈரான் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக மார்ச் மாதம் முதல் தார் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தீரும் என ஒரு நாடாகவும் நிறுவனமாகவும் நாம் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எனினும், இது நீண்டகாலப் பிரச்சினையாக மாறியுள்ளது. தார் தட்டுப்பாடு காரணமாகப் பிரதேச சபை வீதிகள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வரையிலான அனைத்து அபிவிருத்திப் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் நிறுவன ரீதியாகச் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
எமது நாட்டின் காலநிலைக்குப் பொருத்தமான தார் வகைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து மாதிரிகளாக வரவழைத்து, அவற்றில் பொருத்தமானவற்றை இறக்குமதி செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
சுமார் எட்டு மாதங்களாகப் பாதிக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
இதேவேளை, ‘டித்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த நாட்டின் ஏ மற்றும் பி தரத்திலான சுமார் 490 வீதிகள் இதுவரை புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வீதிகளைப் புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.
‘டித்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த நாட்டின் நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் பிரியந்த தீகல, ‘டித்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த அனைத்துப் புகையிரதப் பாதைகளினதும் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் ஆண்டிற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.








