இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தே நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
கடந்த 2016 மார்ச் 30ஆம் திகதி கொழும்பு, கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனடிப்படையில், இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 291ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டில் ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றம் அவருக்கு 4 வருட பாரிய கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
இந்நிலையில், குறித்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது.







