2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தங்களது தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப் பணிகளுக்கான தேவைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, நாட்டின் பல்வேறு அரச சேவைத் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய, நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் 450க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள், தங்களது சொந்தப் பணத்திலிருந்தே எரிபொருள் மற்றும் களப் பணிகளுக்கான செலவுகளை ஏற்க வேண்டியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, நேற்று (15) நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசன தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் துஷார வைத்தியரத்ன, தங்களது கோரிக்கைகளுக்கு இரண்டு நாட்களுக்குள் அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறினால், தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை, கடந்தகால அனர்த்தங்களின் போது முன்வைக்கப்பட்ட நான்கு பிரதான கோரிக்கைகளும் கடந்த 5 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், இம் முறை வரவு செலவுத் திட்டத்தில் தங்களது கோரிக்கைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று காலை முதல் அனைத்து அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்தும் விலகி, தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் குமார தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள களப் பணிகளுக்கான கொடுப்பனவை மீண்டும் வழங்குமாறு கோரியும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாமையைக் கண்டித்தும் அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் இன்று பொல்துவ சந்தி, பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, இது சம்பள உயர்வைக் கோரும் போராட்டமல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
களப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்படும் மேலதிக செலவுகளை ஈடுசெய்வதற்காக உரிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








