உயர்கல்வி கற்பதற்காக முதன்முறையாக பெலாருஸுக்கு வருகை தரும் இலங்கை மாணவர்களுக்கான நுழைவு விசா கட்டணத்தை ரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த மே மாதம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பெலாருஸுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பயனாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பெலாருஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டுக்குச் செல்வதற்கான விசா நடைமுறைகளை எளிதாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் பெலாருஸில் உயர்கல்வி கற்க எதிர்பார்த்துள்ள இலங்கை மாணவர்களுக்கும், அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








