இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான 2,257 வீதி விபத்துகளில் மொத்தம் 2,381 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்ட அவர், அதிவேகமாக வாகனம் செலுத்துதல் மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டம் ஆகியன உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அமைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டில் வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 785 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், 227 பேர் பாதசாரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுமார் 60 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் எச்சரித்துள்ளார்.
தமது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கும்போது பெற்றோர் கூடுதல் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அதிவேகம் மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரம்பேவ பகுதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், போட்டித்தன்மையுடன் வாகனம் செலுத்தியமை மற்றும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றமை ஆகியன இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வழங்கிய தகவல்களின்படி, குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 76 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், நான்கு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 609 பொலிஸ் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 10,000 போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதிப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகனச் சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், பயணிகள், பாதசாரிகள் மற்றும் ஏனைய வீதிப் பயனாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாகனச் சாரதிகள் தங்களது இலக்குகளைப் பாதுகாப்பாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே போக்குவரத்துப் பொலிஸாரின் பிரதான பொறுப்பு என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.








