2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின்சாரக் கட்டணத்தைத் திருத்தம் செய்யாமல் இருப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, மூன்றாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த அதே மின்சாரக் கட்டண முறைமையே நான்காவது காலாண்டிலும் அமுலில் இருக்கும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் (NSO) சமர்ப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 2.88 சதவீதத்தால் அதிகரிக்கும் என ஆணைக்குழு கணித்துள்ளது.
எனினும், நவம்பர் 9ஆம் திகதி புதுப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்தாலோசனையின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் யோசனைகளைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணத்தில் எவ்வித திருத்தத்தையும் மேற்கொள்ளத் தேவையில்லை என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான செலவுத் தரவுகளை NSO நிறுவனம் ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்திருக்க வேண்டும். எனினும், குறித்த தரவுகள் ஒக்டோபர் 6ஆம் திகதியே ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







