இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அஸான் அவாய்ஸ் (Azan Awais) 30 ஓட்டங்களையும், தையப் ஆரிஃப் (Tayyab Arif) 57 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு சிறந்த தொடக்கத்தை வழங்கினர்.
தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் தாஹா 51 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 50 ஓட்டங்களையும் பெற்று அரைச்சதம் கடந்தனர்.
மத்திய வரிசையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சவுத் ஷகீல் (Saud Shakeel) 93 ஓட்டங்களைக் குவித்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அராபத் மின்ஹாஸ் (Arafat Minhas) 52 ஓட்டங்களையும், காசி கோரி (Ghazi Ghori) 48 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இறுதியில், 106.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான இன்று (10) பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய அசித பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லஹிரு குமார மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.








