அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு முறையான நிறுவன மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை அளவிடக்கூடிய முக்கிய செயலாற்றுகைக் குறிகாட்டிகளை (KPIs) அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்துவது அவசியம் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது உபகுழுவின் முன்னிலையில் முதற்கட்டமாகத் தமது நிறுவனத் திட்டங்களைச் சமர்ப்பித்த 41 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களில் உள்ள முக்கிய செயலாற்றுகைக் குறிகாட்டிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுச் செயலமர்வு அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் பணிகள், நிதி ஒழுக்கம் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை முறையாகப் பேணுவதற்கு, அவற்றின் சட்டபூர்வ அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை அடையாளம் கண்டு அதற்கமைய செயற்படுவது அவசியம் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்தகால கணக்காய்வுப் பிரச்சினைகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நிறுவனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அவற்றின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்வது முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








