ஏ.எஸ்.எம். ஜாவித்
நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம், டெங்கு தொற்று ஏற்படும் அபாயம் நிலவும் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்களை ஈடுபடுத்துதல், உரிமையாளர்களற்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அழித்தல் மற்றும் சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாடசாலைகள், பிரிவேனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட துப்புரவுப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான நாளாந்த நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு அறையொன்றின் ஊடாகக் கண்காணிக்கப்படுகின்றன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) செயலகம், இலங்கை பொலிஸ், முப்படையினர் மற்றும் ஏனைய தன்னார்வ அமைப்புகளும் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இதேவேளை, தலைநகர் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (10) காலை கொழும்பு 12, மெசன்ஜர் வீதி தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியை அண்மித்த பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், குறித்த பகுதியில் பொதுமக்களும் வர்த்தகர்களும் கழிவுப் பொருட்களைப் பொறுப்பற்ற விதத்தில் கண்ட இடங்களில் வீசியிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களும் தமது சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.












