சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (10) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
அனைத்து மாவட்டக் கிளைச் சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும், இது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் நடைபெறவுள்ளதாகவும் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகளுக்கோ அல்லது நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பணிப்புறக்கணிப்பும் இன்றி, நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும், அரசாங்கத்துக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இணைந்த சுகாதார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.








