உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய்களின் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 0.59% வீழ்ச்சியாகும்.
அதேபோல், பிரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.31 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் விலை 1.06% வீழ்ச்சியடைந்துள்ளது.இதற்கிடையில், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிதளவு அதிகரித்து 99.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஈரானுடனான போர் மோதல்கள் தணியக்கூடும் என்ற சந்தை எதிர்பார்ப்புகள் கச்சா எண்ணெய் விலைகளின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஈரானுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் மேலும் தீவிரமடைவதற்கான அபாயம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் கச்சா எண்ணெய் விலைகளின் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.








