எகிப்தின் கீஸா (Giza) நகருக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்த இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பல ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக எகிப்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடத்துமாறும், அலட்சியமாகச் செயற்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்திய செம்பிறைச் சங்கம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளையும் உளவியல் ஆதரவையும் வழங்கி வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ரயில் சாரதி ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, 2009ஆம் ஆண்டிலும் எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.








