பிரேசில் கால்பந்து லீக் போட்டியின்போது எதிரணி வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது வாயை மூடிய சம்பவம் தொடர்பில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் பஹியா அணிக்கு எதிராக சான்டோஸ் அணி விளையாடிய போட்டியின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், பிரேசிலின் விளையாட்டு நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சம்பியன்ஸ் லீக் போட்டியின் போது, எதிரணி வீரர் ஒருவர் தனது ஜெர்சியால் வாயை மூடியபடி தன்னை இனவாத ரீதியில் அவமதித்ததாகக் குற்றம் சாட்டிய வினிசியஸ் ஜூனியரின் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறை விதியை நெய்மர் மீறியுள்ளதாகத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நெய்மர் மொத்தமாக மூன்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மஞ்சள் அட்டைகளைப் பெற்றதற்காக ஒரு போட்டியிலும், எதிரணி வீரரின் வாயை மூடிய சம்பவத்துக்காக இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாகப் பெற்ற மஞ்சள் அட்டைகளுக்கான தடையை, பிரேசில் லீக்கில் பால்மெய்ராஸ் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் அனுபவிக்கவுள்ளார்.
மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நவம்பர் மாத இறுதியிலேயே அவர் மீண்டும் களத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தத் தடைக்கு எதிராக நெய்மரும் சான்டோஸ் அணியும் மேல்முறையீடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








