மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து இன்று (29) கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதன் மூலம், முந்தைய நாளில் பதிவான விலை உயர்வின் ஒரு பகுதி ஈடுசெய்யப்பட்டுள்ளது.இதன்படி, பிரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.7 சதவீதத்தால் குறைந்து 114.50 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) ரக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1 சதவீதத்தால் குறைந்து 101.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கு முன்னதாக, புதன்கிழமையன்று பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 1.3 சதவீதத்தாலும், WTI ரக கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதத்தாலும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், ஈரானிய பாதுகாப்புச் சபையின் தலைவர் மொஹ்சென் ரெசாயிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (Wall Street Journal) நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இந்த விவகாரம் தொடர்பில் அறிந்த நபர்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான முன்னேற்றங்கள், உலகளாவிய எண்ணெய் சந்தையின் விலை மாற்றங்களில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.







