இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever) மீண்டும் பதிவாகி வருவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு சில பகுதிகளில் மீண்டும் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 48 பண்ணைகளிலும் சுமார் 1,200 பன்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சுமார் 200 பன்றிகளுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனப்பெருக்கம் மற்றும் இறைச்சி உற்பத்திக்காகப் பன்றிகளை வளர்க்கும் பண்ணைகளில் இந்த நோய்த் தொற்று பதிவாகியுள்ளதுடன், ஒவ்வொரு பண்ணையிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பன்றிகளாவது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்களுக்குப் பரவாது
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் நோய் அல்ல எனத் தெரிவித்த வைத்தியர் பிரதீப் குமாரவடு, இந்த நோய் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பன்றிகளின் இறைச்சி மனித நுகர்வுக்குப் பொருத்தமானதா என்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது என்றும் தெரிவித்துள்ளார்.
பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்
இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்காகப் பண்ணையாளர்கள் உரிய தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் சுகாதார நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, சிறிய அளவில் பன்றிகளை வளர்ப்போர் சிலர் தமது வீடுகளிலேயே பன்றிகளை அறுத்து, அவற்றின் கழிவுகளை நீர்நிலைகளுக்கு அருகில் கொட்டுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய செயற்பாடுகள் நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக அமையக்கூடும் என எச்சரித்துள்ளார்.
எனவே, பன்றிகளை அறுத்த பின்னர் உருவாகும் கழிவுகளை உரிய நடைமுறைகளுக்கு அமைய அகற்றுவதுடன், நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களையும் பண்ணையாளர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








