இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு தரப்பும் தெளிவான வெற்றியைப் பெறாத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளதாக ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (க்னெசெட்), சுமார் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கொட் தலைமையிலான எதிரணிக் கூட்டணி 48 ஆசனங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபுக் கட்சிகள் தலைமையிலான அணிகள் 19 ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகக் கருதப்படுவதுடன், அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் இந்த அணிகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 61 ஆசனங்கள் அவசியமாகும். எனினும், பிரதான இரு அணிகளும் தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளன.
நெதன்யாகுவின் அரசியல் கூட்டணியில் அவரது லிகுட் கட்சி தொடர்ந்து மிகப்பெரிய கட்சியாகத் திகழ்கின்றது. மறுபுறம், எதிரணிக் கூட்டணியில் ஐசென்கொட்டின் யாஷார் கட்சி முன்னிலை வகிக்கின்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவுகள், இஸ்ரேலில் நீண்டகால அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அரசியல் தலைவர்கள் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரபுக் கட்சிகள் தலைமையிலான அணிகளின் வலுவான தேர்தல் செயல்பாடு, ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இந்தக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கருத்து வேறுபாடுகள் முக்கிய தடையாக நீடிக்கின்றன.
இராணுவத்தினர் மற்றும் இராஜதந்திரிகள் அளித்த வாக்குகள் உள்ளிட்ட எஞ்சிய வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதால், இறுதி முடிவுகள் இந்த வாரத்தின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சொக் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை எந்தவொரு வேட்பாளரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து தீர்மானிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை, பெஞ்சமின் நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து பதவி வகிப்பார்.








