அப்ரா அன்சார்
2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இலங்கையின் சிலோன் தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்த நாடாக துருக்கி முன்னிலை பெற்றுள்ளது. குறித்த காலப்பகுதியில், இலங்கையிலிருந்து சுமார் 30.42 மில்லியன் கிலோகிராம் தேயிலையை துருக்கி இறக்குமதி செய்துள்ளது.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 143 சதவீத அதிகரிப்பாகும். இலங்கைத் தேயிலைக்கான முக்கிய சந்தையாக துருக்கி வளர்ச்சியடைந்து வருவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு வலுப்பெற்று வருவதையும் இந்த அதிகரிப்பு எடுத்துக்காட்டுகிறது.
துருக்கி ஒரு முக்கிய தேயிலை உற்பத்தி நாடாகவும் விளங்குகிறது. குறிப்பாக, கருங்கடலின் கிழக்குக் கரையோரப் பகுதிகளான ரைஸே, டிராப்சோன் மற்றும் ஆர்ட்வின் மாகாணங்களில் தேயிலைப் பயிர்ச்செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், அந்நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கணிசமான அளவில் தேயிலையும் இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் தனிநபர் தேயிலை நுகர்வு அதிகமுள்ள நாடாகத் துருக்கி விளங்குவதால், அந்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இலங்கை முக்கிய விநியோக நாடாகத் திகழ்கிறது.
துருக்கி மொழியில் தேயிலை ‘சாய்’ (Çay) என அழைக்கப்படுகிறது. அங்கு தேயிலை என்பது அன்றாடம் அருந்தப்படும் பானம் மட்டுமல்ல; தலைமுறைகளைக் கடந்து தொடரும் ஒரு பண்பாட்டு மரபாகவும் விளங்குகிறது.
துருக்கியத் தேநீர், ‘சாய்தான்லிக்’ (Çaydanlık) எனப்படும் இரண்டு அடுக்குகளைக் கொண்ட தேநீர் பாத்திரத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. கீழே உள்ள பெரிய பாத்திரத்தில் நீர் கொதிக்க வைக்கப்படுவதுடன், மேலே உள்ள சிறிய பாத்திரத்தில் தேயிலைகள் ஊறவைக்கப்பட்டு செறிவான தேநீர் தயாரிக்கப்படுகிறது.
பின்னர், விரும்பிய செறிவைப் பெறுவதற்காக முதலில் செறிவான தேநீர் கண்ணாடிக் கோப்பையில் ஊற்றப்பட்டு, அதனுடன் சூடான நீர் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் தேநீருக்கே உரிய சிவப்புக் கலந்த பழுப்பு நிறம் கிடைக்கிறது.
பொதுவாகப் பால் சேர்க்காமல் சூடாகப் பருகப்படும் துருக்கியத் தேநீருடன், பெரும்பாலும் சீனியும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. ‘இன்ஜே பெல்லி’ (İnce belli) எனப்படும் இடைப்பகுதி குறுகிய, துலிப் மலர் வடிவிலான வெளிப்படையான கண்ணாடிக் கோப்பைகளில் தேநீர் பரிமாறப்படுவது அந்நாட்டின் தனித்துவமான மரபாகும். இந்தக் கோப்பைகள் தேநீரின் நிறத்தை ரசித்தபடி அதன் வெப்பத்தையும் அனுபவிக்க உதவுகின்றன.
தேநீர் தயாரிக்கும் முறையைத் தாண்டி, துருக்கிய சமூக வாழ்க்கையிலும் அது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. விருந்தோம்பல், நட்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகத் தேநீர் கருதப்படுகிறது.
காலை உணவு முதல் இரவு நேரம் வரை குடும்பச் சந்திப்புகள், நண்பர்களுடனான உரையாடல்கள், வணிகச் சந்திப்புகள் மற்றும் பல்வேறு சமூக நிகழ்வுகளில் தேநீர் இடம்பெறுகிறது. ஒருவருக்குத் தேநீர் வழங்குவது வரவேற்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
வீடுகள், பணியிடங்கள், பாரம்பரிய தேநீர் விடுதிகள் மற்றும் தேநீர்த் தோட்டங்கள் எனப் பல்வேறு இடங்களில் தேநீர் பரிமாறப்படுவதன் மூலம் மக்கள் ஒன்றிணைவதுடன், உரையாடல்களும் சமூக உறவுகளும் வலுப்பெறுகின்றன.
இந்நிலையில், துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும் தேயிலை வர்த்தகம் பொருளாதார வெற்றியாக மட்டுமன்றி, இரு நாடுகளின் பண்பாடுகளையும் இணைக்கும் பாலமாகவும் அமைந்துள்ளது.
இது இரு மக்களுக்கும் இடையிலான பொதுவான மரபுகள், பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால நட்புறவைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.








