ஏ.எஸ்.எம். ஜாவித்
கொழும்பு:இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மௌலவி எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) தொடராக வழங்கிய இஸ்லாமிய மார்க்க விளக்கங்கள் தொகுக்கப்பட்ட ‘ஹுப்புர் ரஸூல்’ (Kubbur Rasool) நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (24) கொழும்பு 12, டாம் வீதியில் அமைந்துள்ள பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில், மர்ஹூம் எஸ்.ஏ.எம்.எம். அஸ்ரப் நினைவரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் யு.பி. முஹம்மது ஆசிக் தங்கள் தலைமை தாங்கினார்.
ஆசிக் தங்களின் சூரத்துல் பாத்திஹா ஓதலுடன், கஹட்டோவிட்ட முஅஸ்ஹர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி மாணவி ஏ.சி. ஆமினாவின் கிராஅத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு கிங்ஸ் யூத் கிளப் உறுப்பினர் அப்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார். கஹட்டோவிட்ட முஅஸ்ஹர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகளின் வரவேற்புப் பாடல்களும் இடம்பெற்றன.
நிகழ்வில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் மக்கி நூஹ்தம்பி மற்றும் மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலின் துணைத் தலைவர் ஏ.எச்.எம். மாஹிர் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்ட கலாநிதி ரயீஸ் மீரா மற்றும் களுத்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஹிஸாம் சுஹைல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நூல் தொடர்பான ஆய்வுரையை அஸ்ஸெய்க் கலாநிதி அஸ்வர் அஸாஹிம் நிகழ்த்தியதுடன், மர்ஹூம் எஸ்.ஏ.எம்.எம். அஸ்ரப் தொடர்பான நினைவுப் பேருரையை கலாநிதி எம். அஸீம் வழங்கினார்.
நூலாசிரியர் மௌலவி அல்ஹாஜ் எம்.என்.எம். இஜ்லான் (ஹாஷிமி) ஏற்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் அல்ஹாஜ் அஹமத் முனவ்வர் நன்றியுரையாற்றினார்.
நூலின் முதல் பிரதியைப் பிரபல வர்த்தகரும் மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலின் துணைத் தலைவருமான ஏ.எச்.எம். மாஹிர், சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் யு.பி. முஹம்மது ஆசிக் தங்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஏனைய அதிதிகளுக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
இதன்போது, நூலாசிரியர் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் உமர் காமில், முன்னாள் ஆளுநர் அலவி மௌலானாவின் தனிப்பட்ட செயலாளர் நக்கீப் மௌலானா, அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர் சறூக் ஹாஜியார், பலாஹ் மௌலானா, முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் உறுப்பினர்கள், கொழும்பு கிங்ஸ் யூத் கிளப் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், உலமாக்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.








