இலங்கையில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகனங்களின் மின்கலங்களை முறையாகச் சேகரித்தல், சேமித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் அகற்றுவதற்கான போதுமான தேசிய முகாமைத்துவ முறைமை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு, அவற்றின் பயன்பாட்டுக்குப் பிந்தைய முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சிறப்புக் கணக்காய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கழிவு முகாமைத்துவக் கொள்கையின் கீழ், பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகன மின்கலங்களை நிர்வகிப்பதற்கான வேலைத்திட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்கலங்களைச் சேகரித்தல், மறுசுழற்சி செய்தல், அவற்றின் பயன்பாட்டுப் பாதையைக் கண்காணித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அகற்றுதல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த நிறுவனக் கட்டமைப்பு நிறுவப்படவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மின்கல முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும் போதிய அளவில் காணப்படவில்லை எனத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வின்போது மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில், பயன்படுத்தப்பட்ட சில மின்கலங்கள் திறந்தவெளிகளில் சேமித்து வைக்கப்படுவதும், பெரிய பைகளில் அடைத்து வைக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறான நடைமுறைகளால் ஊழியர்களின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகன மின்கலங்களை முகாமைத்துவம் செய்யும் தொழில்துறை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. இதற்கான முறையான தேசிய மின்கல மீளப்பெறல் முறைமையோ விரிவான கண்காணிப்புக் கட்டமைப்போ இதுவரை உருவாக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கலங்களைச் சேமித்தல் மற்றும் கொண்டு செல்லுதல் தொடர்பான தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் இல்லாததால், இத்தொழில்துறை பெரும்பாலும் தற்காலிக வணிக ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே இயங்கி வருவதாகவும் கணக்காய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகன மின்கலங்களைப் பெருமளவில் அகற்ற வேண்டிய நிலையை இலங்கை இதுவரை அடையவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, 2026ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தின் மூலம், மின்கல முகாமைத்துவம் தொடர்பில் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் பொறுப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், இச்சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக விதிமுறைகள், செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்புப் பொறிமுறைகளை விரைவாகத் தயாரிக்க வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் லித்தியம்-அயன் (Lithium-ion) மின்கலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான அபாயமும் அதிகரிக்கும் எனக் கணக்காய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.








