ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையைத் திசைதிருப்பி, பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த முயற்சிகளைத் தடுத்து, நுகர்வோரின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 2021ஆம் ஆண்டில் நிபுணர் குழுவொன்றினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நாட்டின் நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாம் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் நிதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் இணைந்து, இலங்கைக்கு பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு, அதன் ஊடாக மீண்டும் பாம் எண்ணெயை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரஞ்சித் விதானகே மேலும் தெரிவித்தார்.







