இலங்கையின் சர்வதேச சுற்றுலா ஊக்குவிப்புப் பிரசாரத்தை முன்னெடுப்பதில், காலாவதியான அரச கொள்வனவு நடைமுறைகள் காரணமாக சுமார் 18 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள அரச கொள்வனவு விதிமுறைகள் நவீன விளம்பரப் பிரசாரங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை எனவும், இதனால் விளம்பர நிறுவனங்களைத் தெரிவுசெய்தல் மற்றும் சுற்றுலா சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட அரச கொள்வனவு நடைமுறைகளை, விளம்பரம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு போன்ற படைப்பாற்றல் சார்ந்த சேவைகளுக்குப் பயன்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும் என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
“எமது கொள்வனவு நடைமுறைகளின் கீழ் ஒரு மேசையைக் கொள்வனவு செய்ய முடியும். ஆனால், ஒரு விளம்பரப் பிரசாரம் என்பது என்ன? அது ஒரு யோசனை. அந்த யோசனையை எவ்வாறு கொள்வனவு செய்வது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விளம்பர நிறுவனமொன்றைத் தெரிவுசெய்வதற்கு, அந்நிறுவனங்கள் முன்வைக்கும் படைப்பாற்றல் மிக்க முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சிறந்த பெறுமதியை வழங்கும் முன்மொழிவைத் தெரிவுசெய்வதற்கான முறையான பொறிமுறையொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சர்வதேச சுற்றுலா ஊக்குவிப்புப் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் பிரசாரத்துக்கான விலைமனுக்களை 2027 ஜனவரியில் கோருவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐந்து நாடுகளில் சிறிய அளவிலான சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு
இதேவேளை, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் முன்வைத்துள்ள செயல்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பிலும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இணக்கம் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சி இலக்கை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நிதி ஊக்குவிப்புகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இதற்குத் தேவையான நிதியை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படைப்பாற்றல் சார்ந்த சேவைகள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகளுக்கு ஏற்ற வகையில் அரச கொள்வனவு நடைமுறைகளை நவீனமயப்படுத்துவது அவசியம் என வலியுறுத்திய ஜனாதிபதி, இதன்மூலம் அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.








