தொற்றுநோய்கள் மற்றும் ஏனைய பொது சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான இலங்கையின் தயார்நிலை மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில், 5.43 பில்லியன் ரூபா செலவில் 35 செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ஒருங்கிணைந்த ‘ஒரே சுகாதாரம்’ (One Health) தொற்றுநோய்களுக்கான தயார்நிலை மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் குறித்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, இத்திட்டத்துக்காக மொத்தம் 5,431 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதில், தொற்றுநோய்களுக்கான தயார்நிலை மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4,785 மில்லியன் ரூபா நிதியுதவியாகவும், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பாக 646 மில்லியன் ரூபாவும் உள்ளடங்குகின்றன.
இந்தத் திட்டத்தின் முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (MRI) அமைந்துள்ள தேசிய பொது சுகாதார விசாரணை ஆய்வகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
2026–2028 காலப்பகுதிக்கான விரிவான செயற்றிட்டத்தில், இலங்கை நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையமொன்றை (Sri Lanka Centre for Disease Control and Prevention) நிறுவுவதற்கான முன்மொழிவும் உள்ளடங்குகிறது. இந்த நிலையத்தை நிறுவுவதற்கான நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஊடாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் உள்ளிட்ட ஏனைய பொது சுகாதார அவசரநிலைகளின்போது இலங்கையின் தேசிய பதிலளிப்பு நடவடிக்கைகளில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மனித மற்றும் விலங்கு சுகாதாரத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் அவசரநிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தக் குறைபாடுகள் எடுத்துக்காட்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நன்கொடை வழங்கும் நாடுகள், இணை முதலீட்டாளர்கள், அறக்கட்டளைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து செயற்படும் தொற்றுநோய் நிதியத்திடமிருந்து (Pandemic Fund) நிதியுதவியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கடந்த 2025 மார்ச் 20ஆம் திகதி கைச்சாத்திட்டிருந்தது.
குறித்த ஒப்பந்தத்தின் கீழ், நிதியுதவி வழங்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் 2028 மார்ச் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
தொற்றக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துதல், தாய் மற்றும் சிறுவர் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், தடுப்பூசி வழங்கல் வீதம் 95 சதவீதத்துக்கும் அதிகமாகப் பேணப்படுவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முன்னேற்றங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களுக்குத் தயாராக இருப்பதற்கும் அவற்றைத் திறம்பட எதிர்கொள்வதற்குமான நாட்டின் ஆற்றலை மேம்படுத்துவதும் இந்தப் புதிய திட்டத்தின் நோக்கமாகும்.








