களனி ஆற்றுப் படுகையில் உள்ள நீரிறைக்கும் நிலையத்தை மேம்படுத்துவதற்காக, இலங்கைக்கு சுமார் 4.56 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வத்தளை மற்றும் பேலியகொட பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, வத்தளை மற்றும் பேலியகொட பகுதிகளை உள்ளடக்கிய முடுன் எல உப ஆற்றுப் படுகையில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக, குறித்த நீரிறைக்கும் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும்.
இதற்கமைய, உத்தேச நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றக் குறிப்புகளில் (Exchange of Notes) கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமையகத்துடன் (JICA) நிதியுதவி ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








